பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த கப்பல்கள் பாலத்தில் படகு மோதியதால் பரபரப்பு
பாம்பன் தூக்குப்பாலத்தை கப்பல்கள் கடந்து சென்றன. அப்போது ஒரு படகு பாலத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்,
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மும்பையில் இருந்து காக்கிநாடாசெல்ல 4 இழுவை கப்பல்கள் பாம்பன் வந்து தென் கடல் பகுதியில் துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் நேற்று பகல் 12 மணி அளவில் திறக்கப்பட்டது.
தூக்குப்பாலத்தை திறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் முழுமையாக திறக்கும்முன் வடக்கு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாம்பன், மண்டபத்தை சேர்ந்த 50-க்கும் அதிகமான மீன் பிடி விசைப்படகுகள் தூக்குப்பாலத்தை கடக்க வரிசையாக அணிவகுத்தபடி வந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக பாம்பனை சேர்ந்த விசைப்படகு ஒன்று தூக்குப்பாலத்தில் மோதி நகர முடியாமல் நின்றது. இதையடுத்து உடனடியாக மற்ற படகுகள் வராமல் இருக்க ரெயில்வே பணியாளர்கள் சிவப்பு கொடியை அசைத்து எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து மற்ற படகுகள் அனைத்தும் தூக்குப்பாலம் அருகில் உள்ள கடல் பகுதியிலேயே 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இழுவை கப்பல்கள்
தொடர்ந்து தூக்குப்பாலம் சற்று திறக்கப்பட்ட பின்பு, உரசிய நிலையில் நின்ற அந்த படகு கடந்து தென் கடலை நோக்கி சென்றது. பின்னர் மற்ற படகுகள் வரிசையாக கடந்து சென்றன.
பின்னர் தென் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இழுவை கப்பல்களும், கேரளாவில் இருந்து வந்த 7 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.
Related Tags :
Next Story