எவ்வித தளர்வும் இன்றி இன்று நள்ளிரவு முதல் 6-ந் தேதி காலை வரை முழு ஊரடங்கு கலெக்டர் அறிவிப்பு
எவ்வித தளர்வும் இன்றி இன்று நள்ளிரவு முதல் 6-ந் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருகிற 31-ந்தேதி வரை தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு உத்தரவினை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன்படி தடையாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் தணிக்கும் துறையின் ஆணையின்படி 5-ந் தேதி, 12,19,26-ந்தேதி ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட உள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
அத்தியாவசிய பணிகள்
எனவே, இந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் அத்தியாவசிய தேவையான பால், மருத்துவமனைகள், மருந்து கடைகள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்தி மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மேலும், கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அடையாள அட்டையுடன் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு அறிவிப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story