நாகை மாவட்ட பகுதிகளில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


நாகை மாவட்ட பகுதிகளில்   பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2020 6:43 AM GMT (Updated: 2020-07-04T12:13:31+05:30)

நாகை மாவட்ட பகுதிகளில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்,

ஊரடங்கு கால பிழைப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் 6 மாத காலத்துக்கு இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டும். வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றக்கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்க கூடாது. சுய உதவிக்குழு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்கள் ஆக உயர்த்தி, தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும். வாரியத்தின் மூலம் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

நாகை

ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.16 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்தும் நாகை அவுரி திடலில் ஜனநாயக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சுமைப்பணி தொழிலாளர் முன்னேற்றக்கழக மாவட்ட தலைவர் தம்பிதுரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் மணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பிலோமினா மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நாகூர்

இதேபோல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சோஷியல் டெமாக்ரெட்டிக் டிரேடு யூனியன் சார்பில் நாகூர் தர்கா அலங்கார வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சோஷியல் டெமாக்ரெட்டிக் டிரேடு யூனியன் மாவட்ட தலைவர் சாதிக் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ்தீன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பஹ்ருதீன் சாகிபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜூபைர், கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைஞாயிறு-கீழையூர்

தலைஞாயிறு கடைத்தெருவில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அன்னைவேல் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மகாகுமார், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கீழையூர் கடைத்தெருவில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினர்

தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினர் சார்பில் நாகை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர்களான பிரகாஷ் தலைமை தாங்கினார். ஷேக்ஜஹாங்கீர் உசேன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கண்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story