ஈரோடு மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைகளை திறக்கக்கூடாது என கலெக்டர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் யாரும் கடைகளை திறக்கக்கூடாது என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் யாரும் கடைகளை திறக்கக்கூடாது என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கு
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் கூடுவதை தடுத்திடவும், நோய் தொற்று பரவாமல் பாதுகாத்திடவும், 144 தடை உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்திடவும், நோய் தடுப்பு பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 12, 19, 26-ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நாட்களில் அனைத்து வகையான கடைகள், சந்தைகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக மூடப்படுகிறது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகள் மற்றும் 225 ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், தேனீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும், காய்கறி சந்தைகள், வாரச்சந்தைகள், உழவர் சந்தைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும்.
வாகனங்கள் பறிமுதல்
மேலும் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி கடைகள், வாகன போக்குவரத்துகள், டாஸ்மாக் உள்பட அனைத்தும் மேற்கண்ட 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுமையாக மூடப்பட வேண்டும். இந்த முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம்.
இந்த தடையை மீறி காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயணம் மேற்கொள்பவர்களோ, வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதோடு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
முழு ஒத்துழைப்பு
மேலும் தடையை மீறி வெளியில் வருபவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவார்கள். இந்த முழு ஊரடங்கு நாட்களில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பால் விற்பனை மற்றும் அம்மா உணவகங்கள் உள்ளிட்டவைகள் எந்தவித தடைகளும் இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நோய்த்தடுப்பு, பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் மேற்கண்ட 4 ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கிற்கும் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story