சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தொழிலாளி இறந்ததாக தாய் புகார் வழக்கு பணிக்கு உதவ சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல் நியமனம்
சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தொழிலாளி இறந்ததாக தாய் புகார் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தொழிலாளி இறந்ததாக தாய் புகார் தெரிவித்தார். அவரது வழக்கு பணிக்கு உதவ சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல் நியமிக்கப்பட்டார்.
கட்டிட தொழிலாளி சாவு
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதன்படி, சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன் (28) போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் உயிரிழந்தார்.
வக்கீல் நியமனம்
இதுதொடர்பாக அவரது தாயார் வடிவு, தூத்துக்குடி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவுக்கு மனு அனுப்பினார். அந்த மனுவில், “தனது மகன் மகேந்திரன், போலீஸ் தாக்கியதால் இறந்துள்ளான். எனது மகனின் இறப்புக்கு நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும். தற்போது எனக்கு போதிய வசதி இல்லாத காரணத்தால், நீதி விசாரணை மேற்கொள்ள எனது சார்பாக ஆஜராக இலவசமாக வக்கீல் நியமிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதன்பேரில் வடிவு சார்பாக, வழக்கு நடத்துவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல் பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் வடிவை சந்தித்து சட்ட உதவிகளை செய்தார். பின்னர் அவரது உதவியுடன் வடிவு, தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர், தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர், உள்துறை செயலாளர், மாவட்ட முதன்மை நீதிபதி, சென்னை ஐகோர்ட்டு பதிவாளர், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
Related Tags :
Next Story