பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: கொரோனா பரவலை தடுக்க அரசு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் ஜோதி நிர்மலாசாமி வேண்டுகோள்
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, கொரோனா பரவலை தடுக்க அரசின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, கொரோனா பரவலை தடுக்க அரசின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அச்சப்பட தேவையில்லை
இதுகுறித்து குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
குமரி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை பார்த்து நாம் பயப்பட தேவையில்லை. ஆனால் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் எப்போதும் முக கவசம் அணிய வேண்டியது மிக மிக அவசியம். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே நடமாடுவதை கணிசமாக குறைக்க வேண்டும்.
ஏற்கனவே நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நீர் திவலையின் மூலமாகத்தான் இந்த நோய் பரவும் என்பதால் தும்மல், இருமல் மூலமாக பரவுவதை தவிர்க்க இயலாது. எனவே பிறரிடம் பேசும் போது முக கவசம் அணிவது கட்டாயம். பொது இடங்களில் 3 மீட்டர் இடைவெளி விட்டு நிற்பது மிகவும் பாதுகாப்பானது. ஒருவர் வீட்டில் சமைத்த உணவை இன்னொருவர் வீட்டுக்கு பகிர்ந்து கொள்வதை கொஞ்ச காலம் தவிர்க்கலாம். எதை சாப்பிட்டாலும் சூடாக சாப்பிட பழகி கொள்ள வேண்டும். குளிர்ந்த பதார்த்தங்கள், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
பரவலை தடுக்கலாம்
குமரி மாவட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் மிக அதிகம் என்பதால் அரசு சொல்லும் அனைத்து நடைமுறைகளையும் தவறாது பின்பற்றி இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்வருவோம். குறிப்பாக பெண்கள் இந்த கொடூர வைரஸில் இருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் எப்படி காத்துக்கொள்ள முடியும் என்பதை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். முதியோரையும், நோயுற்றவர்களையும், கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் மிக கவனத்தோடு பாதுகாக்க வேண்டும்.
நமது மாவட்டத்தை பொறுத்தவரை வெளி நாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் அதிகம் என்பதால் இந்த தொற்று வருவதை தவிர்க்க இயலாத நிலை உள்ளது. இந்தநிலை தொடர்ந்தாலும் கூட சரியான நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் தொற்று மேலும் பரவாமல் நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.
முன்மாதிரியாக திகழ வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வைரஸ் தொற்றின் தாக்கத்தை எதிர்கொள்ள முதலமைச்சர் ஆணையின்படி அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதித்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் மிக சரியான முறையில் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை விடவும் கூடுதலாக 2 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் தொற்று பரவல் தடுப்பு பணிகளில் இரவு, பகல் பாராமல் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இத்தனை ஏற்பாடுகள் இருப்பினும் தொற்று பரவாமல் காத்துக் கொள்ளும் மிகப்பெரிய பொறுப்பு பொது மக்களாகிய நம்மிடம் தான் உள்ளது. எனவே பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து வைரஸ் தொற்று பரவாமல் தடுத்து நமது மாவட்டம் மற்ற எல்லா மாவட்டங்களுக்கும் முன்மாதிரியாக திகழ நாம் அனைவரும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story