வேலூரில் ஒரே நாளில் வியாபாரி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு


வேலூரில் ஒரே நாளில் வியாபாரி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
x
தினத்தந்தி 5 July 2020 5:24 AM IST (Updated: 5 July 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வியாபாரி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

வேலூர்

வேலூர் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வியாபாரி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

நாள்தோறும் அதிகரிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அதே போன்று தொற்றால் பலியான நபர்களின் எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அவர்களின் விவரம் வருமாறு:-

சேண்பாக்கம், விருதம்பட்டு

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த 73 வயது முதியவருக்கு கடந்த மாதம் 9-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் முதியவரின் உடல்நிலையை கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று காலை 9 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று காட்பாடி தாலுகா விருதம்பட்டை சேர்ந்த 55 வயது நபருக்கு கடந்த 13-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுகுறித்து 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். கொரோனாவினால் பலியான 2 பேரின் உடல்களும் அரசு விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில், அவருடைய குடும்பத்தினர் சிலர் மட்டும் பங்கேற்றனர்.

வேலப்பாடி

வேலூரை அடுத்த வேலப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (70). இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடந்த 1-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் ராஜசேகருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் கொரோனா தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

குடியாத்தம்

குடியாத்தம் தரணம்பேட்டை ஆலியார் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா (65). இவர், தரணம்பேட்டை பஜாரில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிலருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென அவருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. அவர், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்ந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார்.

23 ஆக உயர்வு

ஒரே நாளில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஒருவர், சி.எம்.சி. மருத்துவமனையில் 3 பேர் என்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Next Story