கொரோனா வராமல் தடுக்க பொதுமக்கள் 4 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் பேட்டி


கொரோனா வராமல் தடுக்க பொதுமக்கள் 4 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் பேட்டி
x
தினத்தந்தி 5 July 2020 2:15 AM GMT (Updated: 5 July 2020 2:15 AM GMT)

மதுரையில் கொரோனா வராமல் தடுக்க பொதுமக்கள் 4 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் கூறினார்.

மதுரை, 

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக கடந்த 20-ந் தேதியில் இருந்து தினமும் குறைந்தது 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நேற்று மிக உச்ச அளவாக ஒரே நாளில் 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவிற்கு 2 ஆயிரத்து 725 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் முன்பை விட, இப்போது பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் 1,500-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக முக்கியமாக ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா நோயாளிகளை கண்டறிவதற்காக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது. எனவே வரும் நாட்களில் கொரோனா பாதிப்பின் வேகம் குறையும்.

நல்ல பலன் கிடைத்துள்ளது

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு ஏற்றப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிகுறி தீவிரமாக இருப்பவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியிலும், பாதிப்பு இல்லாதவர்களுக்கு அரசின் தனிமைப்படுத்தல் முகாம் மூலமும் சிகிச்சை தரப்படுகிறது. இதுதவிர மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, டெலிமெடிசன் சென்டர் என்ற மருத்துவ ஆலோசனை மையம் மூலம் வீட்டிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை தரப்படுகிறது. வீட்டில் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களிடம் தினமும் 2 முறை தொலைப்பேசி மூலம் டாக்டர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள். தற்போது 350 பேர் வரை வீட்டில் இருந்தப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ஏனென்றால் கொரோனா பாதிப்பால் மரணம் என்பது மதுரையில் மிக குறைந்த அளவே உள்ளது. தற்போதைய நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களில் சுமார் 58 பேருக்கு மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது. மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

4 வழிமுறைகள்

மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் 4 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒன்று, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். 2-வது வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 3-வது அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். 4-வது காய்ச்சல், சளி போன்ற ஏதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே கொரோனா இல்லாத மதுரையை உருவாக்கி விடலாம்.

Next Story