அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: பட்டுக்கோட்டை நில தரகர் மீது மேலும் ஒரு வழக்கு


அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி:  பட்டுக்கோட்டை நில தரகர் மீது மேலும் ஒரு வழக்கு
x
தினத்தந்தி 6 July 2020 5:46 AM GMT (Updated: 2020-07-06T11:16:19+05:30)

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பட்டுக்கோட்டையை சேர்ந்த நில தரகர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது66). தொழிலாளர் நலத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நில தரகராகவும் இருந்து வருகிறார். இவர் சென்னை எஸ்.கொளத்தூர் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் சக்திவேல் (43) என்பவரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி மோசடி செய்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்டபோது தமிழரசன், அவருடைய மகன் பிரபாகரன் (29) ஆகிய 2 பேரும் சக்திவேலை கீழே தள்ளி காலால் மிதித்து அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதுபற்றி டிராவல்ஸ் உரிமையாளர் சக்திவேல் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், அவருடைய மகன் பிரபாகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் தர்மபுரியை சேர்ந்த தொழில் அதிபர் புருஷோத்தமன் என்பவர் மகன் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வு எழுதிவிட்டு வேலைக்கு காத்திருப்பதை அறிந்த தமிழரசன் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ.14 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தொழில் அதிபர் புருஷோத்தமன் பட்டுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் ஒரு வழக்கு

இந்த நிலையில் தமிழரசன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தர்மபுரி நகரம் செட்டிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வாஹித்பாபு(56). இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் தமிழரசனுக்கு தொடர்பு ஏற்பட்டது.

பணம் வசூலித்து கொடுத்தால் பலருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக தமிழரசன், வாஹித்பாபுவிடம் கூறி உள்ளார். அவரை நம்பி வாஹித்பாபு அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் ரூ.16 லட்சம் வசூலித்து தமிழரசனிடம் கொடுத்தார். ஆனால் தமிழரசன் வேலை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார்.

மிரட்டல்

பணத்தை திருப்பி தரும்படி வாஹித்பாபு, தமிழரசனின் வீட்டுக்கு சென்று கேட்டபோது பணத்தை தர முடியாது என கூறி அவரை, தமிழரசன், அவருடைய மகன் பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் மிரட்டி உள்ளனர்.

இதுபற்றி பட்டுக்கோட்டை நகர போலீசில் வாஹித்பாபு புகார் கொடுத்தார். அதன்பேரில் தமிழரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story