விருத்தாசலத்தில் கொரோனாவுக்கு கவரிங் கடை உரிமையாளர் பலி மேலும் 2 டாக்டர்கள் உள்பட 55 பேருக்கு தொற்று
விருத்தாசலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கவரிங் கடை உரிமையாளர் பலியானார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கவரிங் கடை உரிமையாளர் பலியானார். மேலும் மாவட்டத்தில் 2 டாக்டர்கள் உள்பட 55 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவரிங் கடை உரிமையாளர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,260 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 887 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
விருத்தாசலம் கடைவீதியை சேர்ந்தவர் 62 வயது நபர். இவர் அதே பகுதியில் கவரிங் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது கவரிங் கடை உரிமையாளருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், டாக்டர்கள் அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனாவுக்கு பலி
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று கவரிங் கடையை பூட்டினர். மேலும் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் கவரிங் கடை உரிமையாளருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
டாக்டர்கள்
இதுதவிர நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வந்தது. இதில் 2 டாக்டர்கள் உள்பட 55 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதாவது கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 2 டாக்டர்கள், ஒரு செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் ஆகியோருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 டாக்டர்கள் உள்பட 4 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு போலீஸ்காரர், பயிற்சி தீயணைப்பு வீரர்கள் 2 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
4 கர்ப்பிணிகள்
இதேபோல் சென்னையில் இருந்து கடலூர் வந்த ஒருவர், பெங்களூருவில் இருந்து ஒரத்தூர், மங்களூர் வந்த 2 பேர், பக்ரைனில் இருந்து பண்ருட்டி வந்த நபர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்த கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 4 பேர், நல்லூர், மங்களூர், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 4 கர்ப்பிணிகள், கடலூர் கிளை சிறையில் உள்ள கைதி ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த கடலூரை சேர்ந்த 3 பேர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், மங்களூர், விருத்தாசலம், கம்மாபுரம், பரங்கிப்பேட்டை, அண்ணாகிராமம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 32 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,315 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 426 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story