கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவு


கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவு
x
தினத்தந்தி 7 July 2020 12:03 AM GMT (Updated: 7 July 2020 12:03 AM GMT)

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் சாமிநாதன் (வயது 53). சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20-ந் தேதி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 4-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

பலியான சாமிநாதன் கடந்த மாதம் 14-ந் தேதி தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினரான குணசேகர் (50) என்பவர் மாந்தோப்பில் ஏற்பாடு செய்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

அப்போது, அந்த விழாவில் கலந்து கொண்ட விழா ஏற்பாட்டாளர் குணசேகர் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் கொரோனாவுக்கு பலியானதாக தெரிகிறது.

இதையொட்டி, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு ஒன்றிய குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களும், ஒன்றிய கவுன்சிலர்களும், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story