சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நடைபெற்ற மருத்துவ முகாமை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் முன்னுதாரணமாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட செம்மையான, உறுதியான நடவடிக்கையின் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரத்து 712 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 352 பேர் பயனடைந்துள்ளனர். அதில் தொற்று உறுதி செய்யப்பட்ட 38 ஆயிரத்து 280 பேரில், 62 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. கோடம்பாக்கம் மண்டலத்தில் கடந்த 14 நாட்களுக்கு முன் 2 ஆயிரத்து 414 தெருக்களில் தொற்று பாதிப்பு இருந்தது. தற்போது 990 தெருக்களில் பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் உணவு பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போது உணவு கிடங்குகளில் 3 மாதத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளது. இந்த மாதம் 9-ந்தேதி வரை வீடுகளுக்கே சென்று ‘டோக்கன்’ வழங்கப்படுகிறது. அதன் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை 10-ந்தேதி முதல் வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா, மண்டல கண்காணிப்பு அதிகாரி டாக்டர் எஸ். வினீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story