உரிய விலை கிடைக்காததால் பருத்தியை எரித்து விவசாயிகள் போராட்டம்
உரிய விலை கிடைக்காததால் பருத்தியை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், எருக்கூர், மாதானம், திருவெண்காடு, ஆச்சாள்புரம், கொண்டல், வள்ளுவர்குடி, அகணி, புங்கனூர், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, தென்னலக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கோடை பயிராக பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த பகுதிகளில் பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது.
அறுவடையான பருத்தியை விற்பதற்காக கடந்த வாரம் திங்கட்கிழமை சீர்காழி அருகே உள்ள எருக்கூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால் கடந்த வாரம் பருத்தி கொள்முதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தனியார் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்து வருகிறார்கள். இது விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
பருத்தியை எரித்து போராட்டம்
பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று எடக்குடி வடபாதி கிராமத்தில் சாலையில் பருத்தியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story