மேலாளர், ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உடன்குடி, ஆறுமுகநேரியில் வங்கி மூடப்பட்டது


மேலாளர், ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உடன்குடி, ஆறுமுகநேரியில் வங்கி மூடப்பட்டது
x
தினத்தந்தி 8 July 2020 11:00 PM GMT (Updated: 8 July 2020 7:43 PM GMT)

வங்கி மேலாளர், ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் உடன்குடி, ஆறுமுகநேரியில் உள்ள வங்கிகள் மூடப்பட்டன.

உடன்குடி, 

வங்கி மேலாளர், ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் உடன்குடி, ஆறுமுகநேரியில் உள்ள வங்கிகள் மூடப்பட்டன.

வங்கி மூடல்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கீழ பஜாரில் உள்ள ஒரு வங்கியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், ஏரல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், உடன்குடி காலங்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக வங்கி நேற்று மூடப்பட்டது. இன்றும் (வியாழன்) வரை அந்த வங்கி மூடப்படுகிறது. மேலும் வங்கியில் பணி புரிந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் நகர பஞ்சாயத்து அலுவலர்கள் அப்பகுதியை உடனடியாக ஆய்வு செய்தனர். வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாபு முன்னிலையில் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரமேஷ், நகர பஞ்சாயத்து பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

ஆறுமுகநேரி

இதேபோல் ஆறுமுகநேரியில் உள்ள ஒரு வங்கி மேலாளருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதனால் அவர் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த வங்கி மூடப்பட்டது. மேலும் அங்குள்ள பணியாளர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. வங்கிக்கு தினமும் வந்து செல்லும் ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து ஊழியர்கள், பணம் செலுத்த அனுமதி வழங்கி கையெழுத்திடும் நிர்வாக அதிகாரி உள்பட 6 பேரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆத்தூர் போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அங்குள்ள போலீசார் ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் சாகுபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும், அவரது மகளுக்கும், ஆத்தூரில் உள்ள சமூக சேவகருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

இதை தொடர்ந்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் வட்டார சுகாதார ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story