நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது


நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 10 July 2020 5:00 AM IST (Updated: 10 July 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 123 பேர் பாதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

நாகர்கோவில்,

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ்

குமரி மாவட்டத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்தது. அதன்பிறகு பரவல் இல்லை. இதனால் குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களது மகிழ்ச்சி நீண்டநாட்கள் நிலைக்கவில்லை.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்ததால் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த நபர்கள், அவர்களது குடும்பத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். மற்ற இடங்களில் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

கோயம்பேடு ஆன சந்தைகள்

வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் வடசேரி சந்தையில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா வந்தது. அதைத்தொடர்ந்துதான் குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. அந்த வியாபாரியை தொடர்ந்து வடசேரி சந்தைக்கு வந்த பொதுமக்கள், மற்ற வியாபாரிகள் என நாகர்கோவிலில் பெரும்பாலான பகுதிகளில் தொற்று பரவ தொடங்கியது. தொடர்ந்து அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம் சந்தை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சந்தைகள் மூலம் நோய் பரவ ஆரம்பித்தது.

சென்னையில் எப்படி கொரோனா பரவ கோயம்பேடு சந்தை காரணமாக இருந்ததோ, அதேபோன்று குமரி மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு கொரோனா பரவ காரணமாகி விட்டது. அதன்பிறகு தூத்தூர் கிராமம், இலங்கை அகதிகள் முகாம், ஆஸ்பத்திரிகள், கடைகள் என எங்கும் கொரோனா நோய் பரவியது.

கிராமங்களில் பாதிப்பு

முதலில் நகர்புறங்களில் பரவி வந்த தொற்று தற்போது கிராமங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக தூத்தூர், சீதப்பால், களுவன்திட்டை மற்றும் வாணியக்குடி ஆகிய இடங்களில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இந்த அளவுக்கு பரவ அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றாமல் இருந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தில் நோய்த்தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மூலம் தினமும் ஏராளமானோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோக களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் களப்பணியாளர்கள் மூலமாகவும் தினமும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

காய்ச்சல் பரிசோதனை

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே காய்ச்சல் பரிசோதனை இரண்டு கட்டங்களாக நடந்தது. அதாவது 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு பரிசோதனை நடந்தது. அப்போது பலருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 20 லட்சம் பேருக்கு மீண்டும் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள்.

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 54 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 2,724 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் வெளியூரில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 5,478 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை 970 ஆக இருந்தது.

நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,084ஆக உயர்ந்துள்ளது.

கலெக்டர்

இதுபற்றி கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. நோயின் தாக்கம் பற்றி அனைவருக்கும் தெரியும். எனவே நோய் பாதித்த நபரை கண்டறிந்து தனிமைப்படுத்துவது அவசியமாகிறது. தற்போது சில கிராமங்களில் கொரோனா பரிசோதனைக்கு பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. சின்ன சின்ன பிரச்சனைகளை வீடியோ எடுத்து பரப்புகிறார்கள். டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் உணவு சரியில்லை என்று கூறுகிறார்கள். சில இடங்களில் மருத்துவ பரிசோதனை நடத்த கூட மக்கள் அனுமதிப்பது இல்லை. தங்களுக்கு எந்த நோயும் வராது என்று கூறி சோதனை நடத்த மறுக்கிறார்கள். இதனால் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மாவட்டம் முழுவதும் 7-ம் கட்டமாக தற்போது நடந்து வருகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட இடங்கள்

குமரி மாவட்டத்தில் வடசேரி, தூத்தூர், அப்டா மார்க்கெட், சீதப்பால், கழுவன்திட்டை, வாணியங்குடி உள்பட 7 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோக மேலும் சில இடங்களும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றி நோய் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் சந்தையிலும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் இருப்பதால் மார்த்தாண்டத்தில் பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன வருகின்றன.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுபோக கோணம் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என்று கண்டறியப்படும். பாதிப்பு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவார். இதுபோக மேலும் 3 அல்லது 4 இடங்களில் வார்டு அமைக்க ஒரு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடு திரும்பினர்...

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 410 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 434 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள்“ என்றார்.

85 பேருக்கு அறிகுறி

சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜாண் போஸ்கோ கூறுகையில், “குமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் ஏற்கனவே சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி கணக்கெடுப்பு 20 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி 15 லட்சம் பேரிடம் கணக்கெடுப்பு முடிந்துள்ளது. அப்போது முதல் நாளில் 55 பேரும், 2வது நாளில் 30 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் நாளையுடன் (இன்று) முடிவடையும்“ என்றார்.

Next Story