தஞ்சைக்கு வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு; கிலோ ரூ.45-க்கு விற்பனை


தஞ்சைக்கு வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு; கிலோ ரூ.45-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 July 2020 5:36 AM IST (Updated: 11 July 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சைக்கு வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை காமராஜர் தற்காலிக மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, ஓசூர், பழனி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் மற்றும் தஞ்சையை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு 1 நாளைக்கு 7 முதல் 8 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

ஆனால் தற்போது விளைச்சல் குறைவு காரணமாக தஞ்சை மார்க்கெட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மட்டும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. அதுவும் தினமும் 5 லாரிக்கும் குறைவாகத்தான் தக்காளி விற்பனைக்கு வருகின்றன. வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் ராயக்கோட்டை பகுதியில் இருந்து மட்டும் தான் குறைந்த அளவு தக்காளி விற்பனைக்கு வருகின்றன.

இதனால் தக்காளி விலை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகின்றன. விலை தொடர்ந்து அதிகரிப்பால் மக்கள் குறைந்த அளவே தக்காளியை வாங்கிச்சென்றனர்.

இது குறித்து தக்காளி வியாபாரி கூறுகையில், “தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு தற்போது 2 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனைக்கு வருகின்றன. ஒரு பெட்டியில் 28 கிலோ தக்காளி இருக்கும். உள்ளூர் தக்காளி வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளது. தற்போது 1 பெட்டி ரூ.1000 முதல் ரூ.1050 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படும். இன்னும் 10 நாட்களுக்குப்பின்னர் தமிழகத்தில் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். அதன் பின்னர் விலை குறையத்தொடங்கி விடும்”என்றார்.

Next Story