மாவட்டத்தில் பெண்கள், முதியோருக்கு உதவிட புதிய திட்டங்கள் தொடக்கம் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தகவல்


மாவட்டத்தில் பெண்கள், முதியோருக்கு உதவிட புதிய திட்டங்கள் தொடக்கம் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தகவல்
x
தினத்தந்தி 15 July 2020 7:52 AM GMT (Updated: 15 July 2020 7:52 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் முதியோருக்கு உதவிட புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதியோர்களுக்காக ‘ஹலோ சீனியர்ஸ்’ மற்றும் பெண்களுக்காக ‘லேடீஸ் பர்ஸ்ட்’ ஆகிய 2 புதிய திட்டங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான செல்போன்களை சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களிடம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதியோர்கள் தங்களது வயது மூப்பின் காரணமாகவும், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் அவர்களது பிரச்சினைகளை உரிய அலுவலருக்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று உரிய நிவாரணம் தேட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ‘ஹலோ சீனியர்ஸ்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான செல்போன் எண் 9994 717110 ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் இதர பிரச்சினை உள்ள முதியோர்கள் தங்களது பிரச்சினைகளை உரிய அலுவலகத்திற்கு சென்று நிவாரணம் தேட இயலாத சூழ்நிலையில் மேற்கண்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.

மேலும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் ‘லேடீஸ் பர்ஸ்ட்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக 9894515110 என்ற செல்போன் எண் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கோ ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவித்தால் காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.

இந்த இரு திட்டங்களிலும் புகார் செய்பவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த எண்கள் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும். புகார் தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் புகார்தாரருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும்.

மேலும் முதியோர்களும், பெண்களும் தங்களுக்கு எற்படும் பிரச்சினைகள் குறித்து இத்திட்டங்களின் மூலம் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். இந்த எண்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி மேற்பார்வையில் செயல்படும். இதனை முதியோர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்து உள்ளார்.

Next Story