புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம் - போலீசார் தீவிர தேடுதல் வேட்டை


புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம் - போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 17 July 2020 9:11 AM IST (Updated: 17 July 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் சிறுமி கொலை வழக்கு கைதி தப்பிச்சென்றார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக போலீசார், அதே பகுதியை சேர்ந்த பூக்கடையில் வேலை செய்யும் ராஜா (வயது 27) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அந்த சிறுமியை கொலை செய்தது ராஜாதான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ராஜா மீது போக்சோ சட்டம், கற்பழிப்பு, கொலை செய்தல், தடயங்களை மறைத்தல், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஏம்பல் போலீஸ் நிலைய ஏட்டு முருகையா, போலீஸ்காரர் கோகுல்குமார் ஆகியோர், கைதி ராஜாவிற்கு ஆண்மைத்தன்மை பரிசோதனை செய்ய, அவரை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ய உரிய டாக்டர்கள் இல்லாததால், நாளை(நேற்று) பரிசோதனை செய்யலாம் என்று மருத்துவ நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.இதையடுத்து அங்குள்ள பொது வார்டில் ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அழைத்துச்சென்ற போலீசார் இரவு முழுவதும் கண் விழித்து கண்காணித்துள்ளனர். நேற்று அதிகாலை 6.30 மணி வரை ராஜா இருந்துள்ளார். இந்நிலையில் ஏட்டு முருகையன் குளிக்க சென்றுள்ளார். அப்போது போலீஸ்காரர் கோகுல்குமார், ராஜாவை கண்காணித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இயற்கை உபாதை ஏற்பட்டதால் ராஜாவை மருத்துவமனை ஜன்னலில் உள்ள கம்பியில் போலீசார் பயன்படுத்தும் நீண்ட சங்கிலியால் கைகளை பிணைத்து கட்டிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ராஜா, ஜன்னலில் பிணைக்கப்பட்டிருந்த விலங்கை நைசாக உருவிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுவதும் சல்லடை போட்டு தேடியுள்ளனர். ஆனால் ராஜா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் ஏம்பல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் கிராமம், கிராமமாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். கேமரா பொருத்தப்பட்ட 3 டிரோன் கருவி மூலம் தேடும் பணி நடந்தது. மருத்துவமனை அருகில் உள்ள தென்னதிரையான்பட்டி, முள்ளூர், வாகவாசல், தச்சம்பட்டி வழியாக அண்டக்குளம் வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதற்கிடையே போலீஸ் மோப்பநாய் மார்ஷல் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடிப்பதற்கு ஏதுவாக சிறையில் இருந்து ராஜா பயன்படுத்திய போர்வை எடுத்து வரப்பட்டது. போர்வையை மோப்பம் பிடித்தபின் அது சிறிது தூரம் ஓடிச்சென்று ஒரு இடத்தில் போய் நின்று கொண்டது.

பஸ், லாரி போன்ற போக்குவரத்து இல்லாத நேரத்தில் கைதி வெகுதூரம் தப்பிச்சென்று இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் போலீசார், ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ராஜாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர் தங்கியுள்ள கிராமங்களில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் டிரோன் கேமராவில் ராஜாவின் அங்க அடையாளங்களை பதிவு செய்து பறக்க விட்டு, ராஜாவை தேடி வருகின்றனர்.இதற்கிடையே நேற்று மாலை ராஜாவை, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பார்த்ததாக சிலர் தெரிவித்ததால், மருத்துவமனை பகுதியை சுற்றி வளைத்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மருத்துவமனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ராஜாவை தேடும் பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story