கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அதிகாரி உள்பட 58 பேருக்கு கொரோனா


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அதிகாரி உள்பட 58 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 July 2020 4:42 AM GMT (Updated: 18 July 2020 4:42 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அதிகாரி உள்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 107 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 ஆயிரத்து 49 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1,378 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் உள்பட 58 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 107 ஆக உயர்ந்துள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு

இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், ரத்த அழுத்தம் உள்ளதா? எனவும் சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மாவட்ட உதவி திட்ட அலுவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமை அலுவலகம் மற்றும் வளாகப்பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Next Story