கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீரென ஆய்வு - அதிகாரிகளிடம் சராமாரி கேள்வி


கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீரென ஆய்வு - அதிகாரிகளிடம் சராமாரி கேள்வி
x
தினத்தந்தி 18 July 2020 11:00 PM GMT (Updated: 19 July 2020 12:49 AM GMT)

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீரென ஆய்வு செய்து அங்கிருந்த அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பின் விவரங்களை சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் அல்லது துறை இயக்குனர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அளித்து வருகின்றனர். ஆனால் கடந்த 10 நாட்களாக கவர்னர் கிரண்பெடி அதிகாலையே கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகிறார். இதனால் இருவேறு விதமான தகவல் வெளியாகி குழப்பம் ஏற்பட்டதால் கொரோனா தடுப்பு பணிக்கு கவர்னர் தடையாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று மதியம் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று திடீரென ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா குறித்து தனக்கு ஒரு வாரமாக தகவல் தராதது ஏன்? என கேட்டார். மேலும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்கிறீர்களா? அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் தேவையான உத்தரவுகளை தினமும் அளிக்கிறீர்களா? என்ன என கேட்டார்.

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் தினமும் அரசுக்கும், சுகாதார மையங்களுக்கும் அளிக்கும் தகவல்களை நகலெடுத்து கொடுத்தனர். அப்போது கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரி யார்? என கேட்டு அவரை வரச்சொன்னார். அதன்படி கட்டுப்பாட்டு மைய பொறுப்பாளரான துணை இயக்குனர் ரகுநாதன் அங்கு வந்தார்.

அவரிடம் சரமாரியாக கவர்னர் பல கேள்விகளை கேட்டார். அவர் தெரிவித்த பதில்களுக்கு திருப்தி அடையாமல், ‘செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருங்கள். மக்களுக்கு உண்மையாக பணியாற்றுங்கள்’ என கவர்னர் ஆவேசமாக கூறினார். ஒரு மணி நேரமாக கவர்னர் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து கடிந்துகொண்டதால் அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story