கொலை வழக்கில் கைதானவரை சிறையில் அடைக்கக்கோரி மாணவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்


கொலை வழக்கில் கைதானவரை சிறையில் அடைக்கக்கோரி மாணவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 21 July 2020 12:03 PM IST (Updated: 21 July 2020 12:03 PM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரை சிறையில் அடைக்கக்கோரி மாணவரின் உடலை சாலையில் வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் மனோஜ் (வயது 21). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மனோஜ் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித்தரக்கோரி, மரூர் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் ஸ்டீபன்(27) என்பவரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளார்.

ஆனால் ஸ்டீபன் மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து கேட்ட மனோஜை ஸ்டீபன் கல்லால் அடித்து கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்டீபனை கைது செய்தனர். இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை முடிந்ததும் மனோஜின் உடல் அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

நடவடிக்கை

இதையடுத்து உறவினர்கள் மற்றும் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த மக்கள் மனோஜின் உடலை ரிஷிவந்தியம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள திருக்கோவிலூர்- சங்காராபுரம் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், பகண்டைகூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், மனோஜை கொலை செய்தது தொடர்பாக ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவில்லை. எனவே ஸ்டீபனை உடனே கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் என கூறினர். அதற்கு போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story