கயத்தாறு பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்


கயத்தாறு பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 July 2020 10:15 PM GMT (Updated: 21 July 2020 7:09 PM GMT)

கயத்தாறு அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கயத்தாறு,

கயத்தாறு யூனியனைச் சேர்ந்த கீழப்பாறைப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தது புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் மேலப்பாறைப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை ஆய்வு செய்தார்.

தெற்கு வண்டானம்-புதுப்பட்டி இடையே ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலையை அமைச்சர் ஆய்வு செய்தார். அதேபோல் வடக்கு வண்டானம்-புதுப்பட்டி இடையே ரூ.52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை அவர் பார்வையிட்டார். இதனைதொடர்ந்து குபனாபுரம்-கொப்பம்பட்டி இடையே நெடுஞ்சாலை துறையினரால் ரூ.7.05 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சாலையை அமைச்சர் ஆய்வு செய்தார்.

குருவிநத்தம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார். காமநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர், ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், அ.தி.மு.க. கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட கவுன்சிலர்கள் ப்ரியாகுருராஜ், சந்திரசேகர், கயத்தாறு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story