பந்தநல்லூர் அருகே, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - போலீசார் குவிப்பால் பரபரப்பு


பந்தநல்லூர் அருகே, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - போலீசார் குவிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 July 2020 10:30 PM GMT (Updated: 22 July 2020 12:00 AM GMT)

பந்தநல்லூர் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பனந்தாள், 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே ஸ்ரீ ரங்கராஜபுரம் மண்ணியாறு கரையோரம் புதிய அரசு மதுபானக்கடை திறக்க திட்டமிடப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த இடத்தில் மதுபான கடை திறக்கக்கூடாது என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று புதிய மதுபான கடையை திறக்க திட்டமிடப்பட்டது இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறிய போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், அந்த பகுதியில் கோவில் மற்றும் பள்ளி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செல்வதற்கு பிரதான வழியாக இருக்கும் இந்த இடத்தில் மதுக்கடை திறக்க கூடாது எனவும், மீறி திறந்தால் மதுக்கடையை சூறையாடுவோம் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.

Next Story