பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ள கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேட்டி


பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ள கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேட்டி
x
தினத்தந்தி 23 July 2020 10:15 PM GMT (Updated: 24 July 2020 3:03 AM GMT)

பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ள வசதியாக கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தினந்தோறும் சென்னையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பரவலை தடுக்க கிராம, நகர்ப்புற அளவில் 12 மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு டாக்டர்களுடன், தனியார் மருத்துவமனை டாக்டர்களும் தன்னார்வலர்களாக சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இது தவிர வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டால் அங்கு சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் அமைத்து, அவர்களை கண்காணிக்கிறோம். தேவைப்படுவோருக்கு பரிசோதனை மேற்கொள்கிறோம். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமை-னையில் கொரோனா ஆய்வகம் உள்ளது. அதில் பி.சி.ஆர். கருவி வைத்து பரிசோதனை முடிவுகளை துரிதமாக வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது கூடுதலாக ஒரு கருவி அமைத்து, அதிலும் பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர கூடுதலாக கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான கருவி வரவழைக்கப்பட்டு, அதை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் அதில் உமிழ்நீர், ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகளை விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வகம் செயல்பாட்டுக்கு வந்தால் நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு பரிசோதனை முடிவுகளை அறிவிக்க முடியும்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும். வர்த்தக சங்கம், செஞ்சிலுவை சங்கம் போன்றவர்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள். மாவட்டத்தில் போதிய படுக்கை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் உள்ளன. கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணித்து வருகிறோம். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோரை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

Next Story