நீலகிரியில் மேலும் 40 பேருக்கு கொரோனா - பாதிப்பு 661 ஆக உயர்வு


நீலகிரியில் மேலும் 40 பேருக்கு கொரோனா - பாதிப்பு 661 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 July 2020 10:00 PM GMT (Updated: 26 July 2020 2:52 AM GMT)

நீலகிரியில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிப்பு 661 ஆக உயர்ந்திருக்கிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது அத்திக்கல் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊட்டி காரப்பிள்ளுவை சேர்ந்த 2 பெண்கள், ஒரு ஆண், ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊட்டி அருகே காவிலோரையை சேர்ந்த 4 பெண்கள், ஒரு சிறுமி, 2 ஆண்கள், மஞ்சகொம்பையை சேர்ந்த 2 பெண்கள் மீக்கேரியை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், நஞ்சநாட்டை சேர்ந்த 2 ஆண்கள், ஒரு பெண், குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேத்தியை சேர்ந்த இரண்டு பெண்கள், ஒரு சிறுவன், ஒரு ஆண் ஆகியோருக்கு வைரஸ் உறுதியானது.

கோவை சென்று திரும்பியவருடன் தொடர்பில் இருந்த ஏக்குணியை சேர்ந்த ஒரு முதியவர், சென்னை சென்று திரும்பிய டிரைவருடன் தொடர்பில் இருந்த சேலாஸ் பகுதியை சேர்ந்த 2 பெண்கள், டிரைவர் பணிக்காக மும்பை சென்று திரும்பிய குன்னூர் வசம் பள்ளத்தை சேர்ந்த ஒரு ஆண், கட்டுமான பணிக்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று திரும்பிய ஊட்டியை சேர்ந்த ஒரு ஆண், மேல் கவ்வட்டி கிராமத்தில் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த தீட்டுக்கல்லை சேர்ந்த ஒரு முதியவர், கன்னியாகுமரி சென்று திரும்பியவருடன் தொடர்பிலிருந்த ஊட்டி ஆரணி ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி ஆகியோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இருந்து ராணுவ பயிற்சி மையத்திற்கு வருகை புரிந்த குன்னூர் வெலிங்டனை சேர்ந்த ஒரு ஆண், தனியார் நிறுவன பணியாளருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த கலிங்கனட்டியை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், கோவை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நபருடன் தொடர்பிலிருந்த கெந்தொரை கிராமத்தைச் சேர்ந்த 4ஆண்கள், 2 பெண்கள், ஒரு சிறுமி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நீலகிரியில் பாதிப்பு 661 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 469 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 190 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Next Story