கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 July 2020 10:30 PM GMT (Updated: 26 July 2020 3:27 AM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார்.

விக்கிரவாண்டி, 

சென்னையில் இருந்து சிவகங்கைக்கு செல்லும் வழியில் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதனால் மருத்துவ மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவர் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கந்தசஷ்டி குறித்து அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு மத நம்பிக்கையையும் யாரும் கொச்சைப்படுத்த கூடாது. அதை யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இதுவரையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. அனைத்து யுக்திகளும் ஆளும்கட்சியிடம் மட்டும்தான் உள்ளதா? எதிர்க்கட்சிகளுக்கு யோசனை கிடையாதா? எங்களுக்கும் நாட்டு மக்கள் மீது பொறுப்பு உள்ளது. ஏன் வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தக்கூடாது. எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தால் என்ன? அதற்கு ஒரு பெருந்தன்மை வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் சுய சிந்தனை இல்லாமல் செயல்படுகிறார்.

சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.ம.மு.க., அ.தி.மு.க., இரண்டையும் ஒன்றிணைத்து அதற்கு தலைமையாக செயல்படுவார். எப்பொழுதுமே அ.தி.மு.க., ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டு வருவது வழக்கம். அ.தி.மு.க.விலுள்ள அடிமட்ட நிர்வாகிகள் அனைவரையும் தெரிந்து வைத்துள்ளவர் சசிகலா. 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வியை சந்திக்கும்.

அப்போது உடனடியாக இரு கட்சிகளும் இணைந்து ஒற்றை தலைமையின் கீழ் செயல்படுவது உறுதி. வரும் தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்தால் வரும் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் அதிகமான வெறுப்பில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகர தலைவர்கள் குமார், விநாயகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story