45 ஆண்டுகளாக உருவாக்கிய 300 ஏக்கர் சமூக காட்டை அழித்து சிப்காட் அமைக்க கூடாது கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனு


45 ஆண்டுகளாக உருவாக்கிய   300 ஏக்கர் சமூக காட்டை அழித்து சிப்காட் அமைக்க கூடாது   கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனு
x
தினத்தந்தி 29 July 2020 1:12 AM GMT (Updated: 29 July 2020 1:12 AM GMT)

300 ஏக்கர் பரப்பளவிலான சமூக காட்டை அழித்து சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி வள்ளிமலையில் 300 ஏக்கர் பரப்பளவிலான சமூக காட்டை அழித்து சிப்காட் அமைக்க முயற்சி நடக்கிறது. அந்த நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க ஆணை அனுப்பப்பட்ட நிலையில், வேடசந்தூர் எம்.எல்.ஏ. அதை ரத்து செய்யும்படி கோரியது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் எம்.பி., ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் என யாரிடமும் கருத்து கேட்காமல் சமூக காட்டை அழிக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ள இயலாது.

மேலும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்கள் பல்வேறு பகுதியில் இருக்கிறது. அவற்றை விவசாயிகளின் சம்மதத்துடன் அரசு உரிய விலை கொடுத்து கையகப்படுத்தி சிப்காட் அமைக்கலாம். அதன்மூலம் வறட்சியான வேடசந்தூர் தொகுதியில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் உருவாகும். அதைவிடுத்து 45 ஆண்டுகளாக பாடுபட்டு உருவாக்கிய 300 ஏக்கர் சமூக காட்டை அழிப்பது சுற்றுச்சூழலுக்கும், வருங்கால சந்ததிக்கும் எதிரானது. மேலும் பொதுமக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும். வள்ளிமலை சமூக காடுகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story