சிறப்பு முகாம்களில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்


சிறப்பு முகாம்களில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை   சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 30 July 2020 8:30 AM IST (Updated: 30 July 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம் மூலம் 43 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில், ஒரு வட்டாரத்திற்கு தலா 3 இடம் வீதம் சிறப்பு காய்ச்சல் தடுப்பு சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் இதுவரை 1,160 முகாம் நடத்தப்பட்டு அதில் 43 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் மூலம் தேவைபடுபவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 29 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கபசுர குடிநீர்

பொதுமக்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்படி சாப்பிட வேண்டும். கபசுர குடிநீரை தொடர்ந்து 3 நாட்கள் வரை குடிக்க வேண்டும். அடிக்கடி சூடான குடி நீரையும் குடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஆலோசனை மற்றும் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 1077 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story