மாவட்ட செய்திகள்

பாலியல் வழக்கில் தலைமறைவான முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைதுபரபரப்பு தகவல்கள் + "||" + Former MLA Nanjil Murugesan Arrested

பாலியல் வழக்கில் தலைமறைவான முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைதுபரபரப்பு தகவல்கள்

பாலியல் வழக்கில் தலைமறைவான  முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைதுபரபரப்பு தகவல்கள்
நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில், 

நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் ஓடி விட்டார். மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டனர்.

மாணவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, மாணவியை அவருடைய தாயாரே பணத்துக்கு ஆசைப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது தெரிய வந்தது. பின்னர் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலமாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதிர்ச்சி தகவல்

அதன்பிறகு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, நாகர்கோவில் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் (வயது 60) அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதேபோல இடலாக்குடி பகுதியை சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43), கோட்டார் பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) ஆகியோரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதை தொடர்ந்து மாணவியை சீரழித்த அவருடைய தாயார், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ. கைது

பின்னர் மாணவியின் தாயார், பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே போலீஸ் தேடுவதை அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அவர் நெல்லை மாவட்டம் உவரியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று நாஞ்சில் முருகேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பலர் சிக்குவார்கள்

அதே சமயத்தில் பணத்துக்காக மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாயார், அவரை சாதாரண நபர் முதல் வி.ஐ.பி.க்கள் வரை விருந்தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவியை மேலும் பலர் சீரழித்திருக்கலாம் என்றும், இதனால் விசாரணையை தீவிரப்படுத்தினால் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் தெரிகிறது.

எனவே, மாணவியின் தாயாரை காவலில் எடுத்து விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதற்கிடையே கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.