வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலில் அதிருப்தி: தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
தாந்தோணியில் நடந்த ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த பதிலில் அதிருப்தி அடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கரூர்,
கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று அதன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், கிறிஸ்டி, துணைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மொத்தம் 68 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, முன்மொழியப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க. கவுன்சிலர் ராஜா பேசுகையில், ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 54 ஆயிரத்து 720 ஒதுக்கீடு செய்யப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிராக்டர் மற்றும் கிருமிநாசினி கொள்முதல் செய்யப்பட்டதாக உள்ளது. ஏற்கனவே ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திட்டப்பணிகள் மேற்கொள்ள நிதி இல்லை என்று கூறுகிறீர்கள். இந்நிலையில் பொது நிதியை வேறு திட்டத்திற்கு செலவிட்டது ஏன்?, ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியில், சுகாதாரவளாகம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கியும், ஒதுக்கப்பட்ட இடம் நீர்நிலை புறம்போக்கு என அனுமதி மறுத்து விட்டு, தற்போது அப்பகுதியில் ரேஷன் கடை கட்ட அனுமதிஅளிக்கப்பட்டு உள்ளது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
அதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிதி இல்லாத காரணத்தால் பொது நிதியில் இருந்து வழங்கப்பட்டு உள்ளது. நிதி வந்த உடன் பொதுநிதிக்கு மாற்றம் செய்யப்படும். மேலும் ரேஷன் கடை அமைய உள்ள இடம் குடியிருப்பு பகுதியாகும் என்றார். அவரது பதிலில் அதிருப்தி அடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜா, புஷ்பா, கல்யாணி, அன்பரசு, கவிதா ஆகியோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, தலைவர், துணைத்தலைவர், அதிகாரிகள் தங்களது அறைகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story