கொரோனாவால் நிதி பற்றாக்குறை: பாம்பன் கடலில் புதிய பாலப்பணிகள் தாமதமாகும் நிலை கிடப்பில் போடப்பட்ட ராமநாதபுரம்-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை திட்டம்
கொரோனாவால் நிதி பற்றாக்குறையால் பாம்பன் கடலில் புதிய பாலப்பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதுபோல் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகமாகி வருவதை தவிர குறைந்தபாடில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் பற்றாக்குறையால் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோல் பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் அமைவதும் இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரி தகவல்
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலையாக மாற்ற கடந்த 2 ஆண்டுக்கு முன்பே மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான அனுமதி வழங்கி விட்டது. ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை அமைப்பதோடு பாம்பன் கடலில் மேலும் ஒரு புதிய ரோடு பாலம் கட்டவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள ரோடு பாலத்தின் அருகிலேயே தென் கடல் பகுதியில் சுமார் ரூ.1,500 கோடியில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல் பெரிய கப்பல்களும் செல்ல வசதியாக பாலத்தின் மையப்பகுதியில் உயரமாகவும் அகலமாகவும் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை
ஆனால் கொரோனாவால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் பற்றாக்குறையால் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் கட்டுமான பணிகள் தொடங்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்றார்.
Related Tags :
Next Story