5-ந்தேதி ராமர்கோவில் கட்டுமான பணிக்கான பூமிபூஜை: ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம், காவிரி-கொள்ளிடம் புனித மணல் - அயோத்திக்கு அனுப்பிவைப்பு


5-ந்தேதி ராமர்கோவில் கட்டுமான பணிக்கான பூமிபூஜை: ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம், காவிரி-கொள்ளிடம் புனித மணல் - அயோத்திக்கு அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 31 July 2020 10:15 PM GMT (Updated: 1 Aug 2020 3:07 AM GMT)

அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பிரசாதம், காவிரி-கொள்ளிடம் ஆறுகளின் புனித மணல் அயோத்திக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான பூமிபூஜை வருகிற 5-ந்தேதி அயோத்தியில் நடைபெறவுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு புண்ணிய தலங்களிலிருந்து பொருட்கள் அயோத்திக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

கடந்த 3 நாட்களுக்கு முன் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து புனித மணலும், மறுநாள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்திலிருந்து புனித மணலும் அயோத்திக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

அதுபோல் ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் பிரசாதத்தை அயோத்திக்கு கொண்டு செல்வதற்காக கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர், தீபக் பட்டர் ஆகியோர் விசுவ இந்து பரிஷத் அமைப்பினரிடம் வழங்கினர்.அத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பெருமாள் பிரசாதங்களும், காவிரி அம்மா மண்டபம் மற்றும் கொள்ளிடம் படித்துறைகளில் சேகரிக்கப்பட்ட புனித மணலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கா, ரெங்கா கோபுரம் பகுதியிலிருந்து நேற்று காலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு, கேரளா அமைப்பு செயலாளர் நாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், கோட்ட பொறுப்பாளர்கள் செல்லதுரை, ஜம்பு, பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பாரத், பிராமணர் சங்க மாவட்ட தலைவர் சங்கர், பா.ஜனதா பாலாஜி, கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசுவ இந்து பரிஷத் ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் கோபாலன், மாவட்ட செயலாளர் சசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story