விருதுநகர், மதுரையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் சாவு- புதிதாக 376 பேருக்கு தொற்று


விருதுநகர், மதுரையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் சாவு- புதிதாக 376 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 1 Aug 2020 10:15 AM IST (Updated: 1 Aug 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர், மதுரையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்தனர். இருமாவட்டங்களிலும் சேர்த்து புதிதாக 376 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் கச்சேரி ரோட்டை சேர்ந்த 29, 40 வயது நபர்கள், ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 36 வயது பெண் போலீஸ், மன்னர்நகரை சேர்ந்த 25 வயது நபர், கணேஷ் நகரை சேர்ந்த 1 வயது பெண் குழந்தை, சிவகாசி ராஜதுரை நகரை சேர்ந்த 26 வயது பெண், 76 வயது முதியவர், வசந்தம்நகரை சேர்ந்த 55 வயது நபர், பராசக்தி காலனியை சேர்ந்த 65 வயது நபர், மகாத்மாகாந்தி நகரை சேர்ந்த 72 வயது முதியவர், ஆமத்தூரை சேர்ந்த 13 பேர், அருப்புக்கோட்டையை சேர்ந்த 16 பேர், பண்ணை மூன்றடைப்பை சேர்ந்த 18 பேர், சங்கரலிங்காபுரம், முள்ளிக்குடியை சேர்ந்த 4 பேர், மினாகுளத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,577 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நகர்பகுதிக்கான 941 மருத்துவ பரிசோதனைகள் வெளியிடப்பட்டதில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகரில் அ.தி.மு.க. கிளை செயலாளர், சிவகாசியில் 60 வயது முதியவர் உள்பட 8 பேர் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது.

மதுரையில் நேற்று புதிதாக 173 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 143 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 7 பேர் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், 2 கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டனர்.

இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 9ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் நேற்று ஒரே நாளில் 202 பேர் குணமானதை தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 2,349 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 613 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், மீதமுள்ளவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்கள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலிலும் இருக்கிறார்கள்.

நேற்று 2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். அவர்கள், 49 வயது ஆண், 51 வயது பெண், 62, 77 வயது முதியவர்கள் ஆவர். நேற்றுடன் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 237-ஆக அதிகரித்துள்ளது.

Next Story