“கடல்வாழ் உயிரின பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க இதுவே தருணம்” - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


“கடல்வாழ் உயிரின பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க இதுவே தருணம்” - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2020 11:30 AM IST (Updated: 1 Aug 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

“கடல்வாழ் உயிரின பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க இதுவே சரியான தருணம்” என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த புஷ்பவனம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை, 

நாட்டிலேயே தமிழகம், குஜராத் கடல்பகுதிகளில்தான் கடல் பசுக்கள் காணப்படுகின்றன. தற்போது இந்தியாவில் 200 கடல் பசுக்கள் மட்டுமே உள்ளன என்று இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் பசு, கடலில் உள்ள புற்களை மட்டுமே சாப்பிடுகின்றன. ஆனால் சில ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் கடலுக்குள் மீன்பிடிக்கும் போது இரட்டை மடி வலையை பயன்படுத்துகின்றன. இதனால் ஆழ்கடலில் உள்ள புற்கள் அழிக்கப்படுவதால் கடல் பசுக்கள் உணவின்றி இறக்க நேரிடுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 முதல் 4 வயதான கடல் பசுவானது, கண் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கியது. இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அதிராமபட்டினம் முதல் அம்மாபட்டினம் வரை கடல்பசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கடல் பசுக்களை பாதுகாக்கவும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் பரிந்துரையை செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அழகுமணி ஆஜராகி, “2019-2020-ம் ஆண்டுகளில் தமிழக கடலோரங்களில் 15-க்கும் மேற்பட்ட கடல்பசுக்கள் இறந்துள்ளன. கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்காலும் கடல்பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. 13 மாதங்கள் கருவை சுமந்து குட்டி போடுகின்றன. மீண்டும் இவை குட்டி போடுவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. இதுபோன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்‘ என வாதாடினார்.

விசாரணை முடிவில், “நிலத்தில் வாழும் விலங்குகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதேபோல் கடல்வாழ் உயிரினங்களை காக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கான நடவடிக்கையை எடுக்க இது சரியான தருணம். மனுதாரர் கடல்பசுக்களின் அழிவு குறித்து பல்வேறு தகவல்களை திரட்டி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆழ்கடல் பகுதியில் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதும் கடல்பசுக்களின் அழிவுக்கு காரணம். இரட்டை மடி வலை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை முறையாக அமல்படுத்த வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசையும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story