புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை மரங்கள் முறிந்து விழுந்தன; மின்சாரம் தடைபட்டது


புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை மரங்கள் முறிந்து விழுந்தன; மின்சாரம் தடைபட்டது
x
தினத்தந்தி 2 Aug 2020 1:21 AM GMT (Updated: 2 Aug 2020 1:21 AM GMT)

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டதால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வந்தது. நேற்று பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டன. சுமார் 3.45 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் லேசாக தொடங்கிய மழை பின்னர் வானத்தில் ஓட்டை விழுந்தாற்போல் கொட்டித் தீர்த்தது. மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகும் லேசாக தூறியபடியே இருந்தது.

இதையொட்டி புதுவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம்தடை செய்யப்பட்டது. அனைத்து வீதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. வீடுகளில் இருந்து மக்கள் தண்ணீரை வெளியேற்றியபடி இருந்தனர்.

நகர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் அதில் இருசக்கர வாகனங்கள் சிக்கின. பல வாகனங்களில் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஓட்டிச் செல்ல முடியாமல் வண்டிகளை தள்ளிக்கொண்டே சென்றனர்.

புதுவை புறநகர் பகுதியான வில்லியனூர், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில், சேலியமேடு, காலாப்பட்டு, திருக்கனூர், திருபுவனை உள்ளிட்ட பகுதியிலும் மழை கொட்டி தீர்த்தது. இதில் திருபுவனை தேசிய நெடுஞ்சாலையில் பட்டுப்போன வேப்பமரம் முறிந்து அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் விழுந்தது. இதனால் மின்வயர்கள் அறுந்து தொங்கின. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மின்துறை உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மதகடிப்பட்டுபாளையம் சாலையின் குறுக்கேயும் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அங்கும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியது. இதுபற்றி அறிந்ததும் மின்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மரங்களை உடனடியாக வெட்டி அகற்றினார்கள். அதையடுத்து மின்இணைப்பு வழங்கும் பணியில் துரிதமாக செயல்பட்டனர். இந்த சம்பவங்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Next Story