ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று - கொரோனாவுக்கு முதியவர் பலி


ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று - கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 3 Aug 2020 12:27 AM GMT (Updated: 3 Aug 2020 12:27 AM GMT)

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் புதிதாக 886 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதுச்சேரியில் 161 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் 32 பேர் என மொத்தம் 200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 பேர், ஜிப்மரில் 28 பேர், கொரோனா கேர் சென்டரில் 3 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கொரோனா அறிகுறியுடன் 88 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக 3,806 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2,309 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,445 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 111 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

புதுவை பங்கூர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 24-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டு மொத்தமாக 40,652 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 440 பேர்களது முடிவுகள் காத்திருப்பில் உள்ளது. 88 பேர் படுக்கை வசதி இன்றி உள்ளனர். அவர்களும் விரைவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு இயக்குனர் மோகன்குமார் கூறினார்.

Next Story