நாகை மாவட்டத்தில், கொரோனாவுக்கு முதியவர் பலி - பாதிப்பு எண்ணிக்கை 817 ஆக உயர்வு
நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். பாதிப்பு எண்ணிக்கை 817 ஆக உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை நாகை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 789 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கப்பட்டதால், தொற்று எண்ணிக்கை 785 என கணக்கிடப்பட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 817 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 456 பேர் குணம் அடைந்துள்ளனர். 355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story