நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.
தென்காசி,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாகி வருகிறது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4,942 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 804 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 83.70 அடியாக இருந்தது. நேற்று 89 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5.3 அடி உயர்ந்தது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 108.92 அடியாக இருந்தது. நேற்று 118.31 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 10.11 அடி உயர்ந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 71.35 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,039 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 55 கனஅடி தண்ணர் வெளியேற்றப்படுகிறது.
கொடுமுடியாறு அணை
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை தீவிரமடைந்தது. இதனைதொடர்ந்து கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44 அடி ஆனது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், ஆய்க்குடி, தென்காசி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்தது.
ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 82 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
சேர்வலாறு- 1, கடனாநதி- 12, ராமநதி- 5, கருப்பாநதி- 2, குண்டாறு- 51, அடவிநயினார்- 37, ஆய்க்குடி- 5.20, தென்காசி- 9.40, செங்கோட்டை- 28, சிவகிரி- 15.
Related Tags :
Next Story