ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்


ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்
x

ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம் மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகள் 40 ஆயிரத்தை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சகோதரிகளான ராஜேஸ்வரி (வயது 65), விஜயலட்சுமி(60), மகேஸ்வரி என்ற பிரபாவதி(57) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தில் பிழைத்து வந்தனர்.

பிரபாவதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபாதையில் இறந்து கிடந்தார். அவரது உடலை தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீசார் உதவியுடன் அடக்கம் செய்தார். ஆதரவற்ற நிலையில் அவரது சகோதரிகளான மூதாட்டிகள் இருவரும் சாலையோரம் தங்கி வந்தனர். வீடு இருந்தும் வீட்டில் தங்க இடம் இல்லை என்று மூதாட்டிகள் கூறியதால் போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

ரூ.2 லட்சம்

அவர்களது வீட்டுக்குள் குப்பைகள் குவியல் குவியலாக மூட்டை கட்டப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் சுத்தம் செய்தனர். அப்போது அந்த வீட்டில் ஆங்காங்கே பணம் சிதறிய நிலையிலும், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பைகளில் சில்லரைகள் குவிந்து கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவற்றை எண்ணி பார்த்ததில் மொத்தம் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாகவே இருப்பது தெரியவந்தது. மேலும் செல்லாத ரூபாய் நோட்டுகளான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் சுமார் ரூ.40 ஆயிரம் வரை இருந்துள்ளது. அத்துடன் 7 பவுன் நகைகளும் இருந்தது.

வீட்டுக்குள் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் சாலையோரம் தவித்த மூதாட்டிகளை கண்டு அந்த பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். போலீசார் மூதாட்டிகளின் குடிசை வீட்டை சுத்தம் செய்து, அவர்களிடம் அந்த நகை, பணத்தை ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story