மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2020 10:00 PM GMT (Updated: 14 Aug 2020 1:20 AM GMT)

மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை,

கொரோனா நோய் தடுப்பினையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வகையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், கபசுரகுடிநீர் பாக்கெட்டுகள், முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற்றுள்ளனர். இந்த நிவாரணத்தொகை அரசு ஊழியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வருமான உச்சவரம்பின்றி வழங்கப்படுகிறது.

எனவே இதுவரை ரூ.1,000 நிவாரணத்தொகை பெறாத சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வருகிற 31-ந் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் பகுதியினை சேர்ந்த ஊராட்சி எழுத்தர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை ஒப்படைத்து ரூ.1,000 நிவாரணத் தொகை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story