மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - புதிதாக 131 பேருக்கு தொற்று


மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - புதிதாக 131 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 13 Aug 2020 10:00 PM GMT (Updated: 14 Aug 2020 4:34 AM GMT)

மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர். புதிதாக 131 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை, கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்தது. ஆனால், சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களால் தொற்று பரவத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று ஒரேநாளில் 131 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில், அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 2 ஆயிரத்து 477 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 63 பேர் குணமடைந்ததால் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று, ஒரேநாளில் 4 பேர் கொரோனால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

கறம்பக்குடி, கிளாங்காடு, மருதன்கோன் விடுதி, மழையூர், கருப்பட்டிபட்டி, பொன்னன்விடுதி, மங்கான்கொல்லைபட்டி, பல்லவராயன்பத்தை ஆகிய கிராமங்களை சேர்ந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதனக்கோட்டை அருகே உள்ள செம்பாட்டூரில் ஒருவர், சோத்துப்பாளையில் இருவர், பெருங்களூர் கிராமத்தில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. குப்பையன்பட்டி கிராமத்தில் 48 வயதுடைய கூட்டுறவு சங்க செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அரிமளம் ஒன்றியம் இரும்பாடு ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 வயது கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவருடைய மாமியார், அந்த பெண்ணின் சகோதரி, 3 வயது பெண் குழந்தை, அரிமளத்தில் எஸ்.எம்.எஸ். நகரில் ஒரு வயது குழந்தை, ஊனையூரில் 19 வயது வாலிபர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Next Story