மும்பை-நாக்பூர் விரைவு சாலையோரம் 24 நகரங்கள் உருவாக்கப்படும் சுதந்திர தின விழாவில் உத்தவ் தாக்கரே உரை


மும்பை-நாக்பூர் விரைவு சாலையோரம் 24 நகரங்கள் உருவாக்கப்படும் சுதந்திர தின விழாவில் உத்தவ் தாக்கரே உரை
x
தினத்தந்தி 16 Aug 2020 2:29 AM IST (Updated: 16 Aug 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

மாநிலம் முழுவதும் 29½ லட்சம் விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மும்பை- நாக்பூர் விரைவு சாலையோரம் 24 நகரங்கள் உருவாக்கப்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மும்பை,

நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. மராட்டிய அரசு சார்பில் மும்பை மந்திராலயா வளாகத்தில் நடந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தேசிய கொடியை ஏற்றினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

மாநில அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனில் கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 29½ லட்சம் விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகாத்மா ஜோதிராவ் புலே சேட்காரி கர்ஜ்முக்தி யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.18 ஆயிரத்து 980 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் அரசு விவசாயிகளிடம் இருந்து 418.8 குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்து உள்ளது.

ரூ.16 ஆயிரம் கோடி

கொரோனா பிரச்சினை காரணமாக தற்போது பள்ளிகளை திறக்க முடியவில்லை. எனினும் கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே மராட்டியம் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் இதுவரை 66 ஆயிரத்து 300 தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கி உள்ளன. 16 லட்சத்துக்கும் அதிகமாக தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பி உள்ளனர்.

12 நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களிடம் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடைய ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கு நன்றி

மராத்தியர்கள், உள்ளூர்வாசிகள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மாநில அரசு mahajobs என்ற இணையதள பக்கத்தை தொடங்கி உள்ளது. மும்பை - நாக்பூர் இடையே பால் தாக்கரே விரைவு சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த விரைவு சாலையோரம் 24 இடங்களில் டவுன்ஷிப்கள் (நகரங்கள்) உருவாக்கப்படும்.

இந்த நேரத்தில் கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் டாக்டர்கள், நர்ஸ், போலீசார் மற்றவர்களையும் பாராட்டுகிறேன். ஜனாதிபதி பதக்கம் பெற்ற போலீசாருக்கும் வாழ்த்துகள். மேலும் ஊரடங்கை கடைப்பிடித்து பண்டிகைகளையும், மத நிகழ்ச்சிகளையும் எளிமையாக கொண்டாடி வரும் மக்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story