அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா: கீழுர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மரியாதை
புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவையொட்டி கீழுர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வில்லியனூர்,
பிரெஞ்சு ஆட்சியில் இருந்து 1.11.1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்றது. அதன்பிறகு இந்திய அரசுடன் இணைய வேண்டுமா? வேண்டாமா? என்று வில்லியனூர் அருகே உள்ள கீழுர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் இந்திய அரசுடன் இணைவதற்கு 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.
இதையடுத்து 16.8.1962-ல் இந்திய அரசுடன் புதுச்சேரி அரசு இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய நினைவுத்தூண் கீழுரில் நிறுவப்பட்டு உள்ளது.
மலர் தூவி மரியாதை
இந்தியா அரசுடன் புதுச்சேரி இணைக்கப்பட்ட ஆகஸ்டு 16-ந் தேதி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று கீழூர் நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றி, நினைவுத் தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது பேசிய முதல்-அமைச்சர், ‘நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரி சுதந்திர நாளாக கொண்டாட ஆவன செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
புகைப்பட கண்காட்சி
விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, மாவட்ட கலெக்டர் அருண், வில்லியனூர் துணை கலெக்டர் அஸ்வின் சந்துரு, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து நாராயணசாமி பார்வையிட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் வினயராஜ் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
கலெக்டரிடம் கோரிக்கை
விழா முடிந்ததும் அங்கிருந்து கலெக்டர் அருண் காரில் புறப்பட்டார். அப்போது அவரை அப்பகுதி இளைஞர்கள் சூழ்ந்தனர். கீழுர் ஏரியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
உடனே கலெக்டர் அருண், வில்லியனூர் துணை கலெக்டர் அஸ்வின் சந்துரு ஆகியோர் நேரடியாக அந்த ஏரிக்கு சென்று பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உடனே உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story