பக்தர்கள் அனுமதி இன்றி பிள்ளையார்பட்டியில் எளிமையாக நடந்த விநாயகர் சதுர்த்தி விழா
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி பிள்ளையார்பட்டி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்றது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக விழா நடைபெற்றது.
கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கற்பக விநாயகர் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். 6-ம் திருநாளான 18-ந்தேதி அன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெற்றது.
முன்னதாக மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு கோவில் தலைமை சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள் தலைமையில் பல்வேறு சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரம் முழங்க அங்குச தேவருக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தீர்த்தவாரி உற்சவம்
பின்னர் காலை 10.20 மணிக்கு கோவில் திருக்குளத்தில் அங்குச தேவருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட முக்குறுணி கொழுக்கட்டை எடுத்து சென்று படையல் செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் வெகுநேரமாக நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு சில பக்தர்கள் மட்டும் கோவில் திருக்குளத்தை சுற்றி கரையோரம் நின்று தீர்த்தவாரி நிகழ்ச்சியை பார்த்து வணங்கி சென்றனர்.
மேலும் சில பக்தர்கள் கோவில் வடக்கு கோபுர நுழைவு வாயில் முன்பு நின்று மூலவரை தரிசனம் செய்தனர். இன்னும் சில பக்தர்கள் கோவில் 4 வீதிகளை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் குருவிக்கொண்டான்பட்டி பழனியப்பன் என்ற செந்தில் செட்டியார், காரைக்குடி மெய்யப்ப செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story