விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன் - கலெக்டர் ஷில்பா தகவல்
விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரப்பினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்தி கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படும். இதற்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் பெறுவதற்கு சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று இணைக்கப்பட வேண்டும். சிறு, குறு விவசாயி என்ற சான்றிதழ் தாசில்தாரிடம் பெற்று இருக்க வேண்டும்.
நில உடைமைக்கு கம்ப்யூட்டர் பட்டா, அடங்கல் நகல் இருக்க வேண்டும். இவற்றுடன் தகுதி உடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story