தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்கள் - கடைகள் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடின
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கையொட்டி திருச்சியில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருச்சி,
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் 10-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மருந்து, பால்கடைகள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. முழு ஊரடங்கையொட்டி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். மாநகரத்துக்குட்பட்ட பாலக்கரை, சத்திரம் பஸ்நிலையம், மத்திய பஸ்நிலையம், ஜங்ஷன், தில்லைநகர், உறையூர், கே.கே.நகர் என எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் அனைத்து சாலைகளும் வாகனங்கள் செல்லாமலும், மக்கள் நடமாட்டமின்றியும் அமைதியாக காணப்பட்டன.
ஆனால் ஒரு சில தெருக்களில் இளைஞர்கள் சிலர் வாகனங்களில் ஆங்காங்கே சுற்றி திரிந்து கொண்டு இருந்தனர். ஊரடங்கை மீறி சுற்றிய இளைஞர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மருந்து வாங்கவோ, மருத்துவமனைக்கு சென்றவர்களை மட்டும் அனுப்பி விட்டு மற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோல் முசிறி, தா.பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் டீ கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள், பெட்டிகடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் முசிறி பஸ்நிலையம், கைகாட்டி உள்ளிட்ட பல இடங்கள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. மேலும் பொது ஊரடங்கை முன்னிட்டு முசிறி, தா.பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச் சாவடி போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் சமயபுரம் கடைவீதி, நால்ரோடு, மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலியில் உள்ள கடைவீதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பைஞ்சீலியில் ஒருசிலர் இருசக்கர வாகனங்களில் சென்று வருவதை காணமுடிந்தது. லால்குடியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்தது. ஆனால் இந்த முழு ஊரடங்கில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய தேவை இன்றி வழக்கம் போல் வலம் வந்ததை காண முடிந்தது. இதே போல் முகக்கவசம் என்பதெல்லாம் அணிந்து தான் செல்ல வேண்டும் என்பதை மக்கள் மறந்து சென்றதுடன் ஏதோ கொரோனாவோ ஒழிந்து விட்டதாக கருதி வலம் வந்ததை எண்ணி சென்று கொண்டிருந்தனர்.
மணப்பாறை பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக இருப்பது கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Related Tags :
Next Story