கோவை மாவட்டத்தில், கொரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்க நடவடிக்கை - ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு


கோவை மாவட்டத்தில், கொரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்க நடவடிக்கை - ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 23 Aug 2020 11:00 PM GMT (Updated: 24 Aug 2020 12:32 AM GMT)

கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரகவளர் ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாக உள்ளதுடன், அதிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், டாக்டர்களால் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்கு சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகாம்களில் வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பின் மூலம் கோவை மாவட்டத்தில் ரூ. 5 கோடியே 16 லட்சம் மதிப்பில் 5 ஆயிரத்து 47 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த ஆண்டு 397 தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டங்களுக்குள் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் வழங்கப்படும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணி நிமித்தமும், தொழில்புரிபவர்களும் எளிதாக சென்று வரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பேரிடர் காலத்திலும் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தான 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ரூ.490 கோடி மதிப்பில் எல்.கி. நிறுவனம், அக்வா குழுமம், ஜே.எஸ்.ஆட்டோ நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் தொழில் தொடங்குவதாக விருப்பம் தெரிவித்துள்ளன.

மேலும், கோவை மாவட்டத்தில் சிறப்பு முயற்சியாக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நோய் எதிர்ப்புசத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பினை 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் பணியானது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகளை முறையாக உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து காக்க சிறப்பான போர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும்வகையில் சிறப்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 532 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைபவர்கள் எண்ணிக்கை 78 சதவீதம் ஆகும். சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 312 மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, 1,902 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எந்தவொரு நிலையினையும் சமாளிக்கும்வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 79 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு 5 ஆயிரத்து 816 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்கின்றன. இனிவரும் காலங்களில் பரிசோதனை முடிவுகளை நோயாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகள் அரசு ஆஸ்பத்திரிகளுடன் இணைந்து செயல்படவேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைஅரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கே.எஸ்.நரேந்திரநாயர், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜா, மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story