குன்னம் தாலுகா அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி வாலிபர்கள் தர்ணா
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி, குன்னம் தாலுகா அலுவலகம் முன்பு வாலிபர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு விளைநிலத்தில் வலை கட்டி கைப்பந்து விளையாடினர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி கிராமத்திற்கு அரசு திட்டங்களான ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அம்மா விளையாட்டு அரங்கம் ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அவற்றை செயல்படுத்த போதிய இடவசதி இல்லாமல் தடைபட்டு, அவை வேறு ஊராட்சிக்கு மாற்றப்பட்டது. இதை அறிந்த பெரிய வெண்மணி கிராம வாலிபர்கள் ஒன்றிணைந்து பெரிய வெண்மணி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் குறித்து ஆய்வு செய்தனர். அதில் நீர்நிலை புறம்போக்கு இடம், செங்கனியம்மன் கோவில் புறம்போக்கு இடம் என 18 ஏக்கர் அளவில் இருப்பதையும், அந்த இடத்தை சிலர் விளை நிலங்களாக பயன்படுத்தி வருவதையும் அறிந்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தில் அம்மா விளையாட்டு அரங்கம் அமைத்து தருமாறு குன்னம் தாசில்தார் மற்றும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை நேற்று மீட்டு தருவதாக, வாலிபர்களிடம் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
வாலிபர்கள் தர்ணா
இந்நிலையில் பெரிய வெண்மணி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், தற்போது கொரோனா கால கட்டத்தில் ஆக்கிரப்புகளை அகற்ற இயலாது என்றும், பின்னர் அகற்றி தருவதாகவும் கூறி உள்ளார். இதனால் பெரிய வெண்மணி கிராம வாலிபர்கள் சுமார் 30 பேர் திரண்டு குன்னம் தாலுகா அலுவலகம் முன்பு சமூக இடைவெளியை கடைப்பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த குன்னம் தாசில்தார் சின்னதுரை, அந்த வாலிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் ஆக்கிரப்புகளை அகற்றி தருவதாக, தாசில்தார் கூறி உள்ளார். இதை வாலிபர்கள் ஏற்காததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபர்கள் கலைந்து சென்றனர். பெரிய வெண்மணி கிராமத்திற்கு சென்ற வாலிபர்கள், அங்கு ஆக்கிரமிப்பு விளை நிலத்தில் கம்பு நட்டு வலை கட்டி கைப்பந்து விளையாடினர்.
போலீசில் புகார்
இதுகுறித்து விளை நிலைத்தை பயன்படுத்தி வரும் அஞ்சலி (வயது 43) மற்றும் 8 பேர், தங்கள் விளை நிலத்தில் பயிர்களை சேதப்படுத்தியதாகவும், தேர்தல் முன்விரோதத்தால் அவ்வாறு செய்துள்ளதாகவும் குன்னம் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாலதி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story