நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்துக்கு கொரோனா மனைவிக்கும் தொற்று; ஆஸ்பத்திரியில் அனுமதி


நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்துக்கு கொரோனா மனைவிக்கும் தொற்று; ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 28 Aug 2020 11:15 PM GMT (Updated: 28 Aug 2020 7:56 PM GMT)

நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருடைய மனைவிக்கும் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை,

உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் கவர்னர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சைக்கு பின்னர் பலர் குணமடைந்தனர். சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது நெல்லை தொகுதி எம்.பி.யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் எஸ்.ஞானதிரவியம் (வயது 56). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஞானதிரவியம் எம்.பி. தனது சொந்த ஊரான பணகுடி அருகே ஆவரைகுளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, பாதிக் கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் வகையில், ஞானதிரவியம் எம்.பி. பல்வேறு இடங்களுக்கும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.

இதற்கிடையே ஞானதிரவியம் எம்.பி. மற்றும் அவருடைய மனைவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள், கன்னியாகுமரியில் உள்ள தங்களுக்கு சொந்தமான விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஞானதிரவியம் எம்.பி., அவருடைய மனைவி ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஞானதிரவியம் எம்.பி.யுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

Next Story