சாலையோரம் நின்ற லாரி மீது டெம்போ மோதியது; 4 பேர் உடல் நசுங்கி பலி புனே அருகே பரிதாபம்


சாலையோரம் நின்ற லாரி மீது டெம்போ மோதியது; 4 பேர் உடல் நசுங்கி பலி புனே அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 29 Aug 2020 5:43 AM IST (Updated: 29 Aug 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புனே,

புனே அருகே அலிபாட்டா பகுதியில் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு கல்யாண் நோக்கி டெம்போ ஒன்று நேற்று அதிகாலை 5 மணி அளவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. டோங்கட்மாலா நெடுஞ்சாலை அருகே வேகமாக டெம்போ வந்தபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டெம்போ அப்பளம் போல் நொறுங்கியது. இதற்கிடையே பின்னால் வந்த கார் ஒன்றும் டெம்போ மீது மோதி நின்றது.

இந்த கோர விபத்தில், டெம்போவில் இருந்த டிரைவர் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிருக்கு போராடினர். இதில் அதிர்ஷ்டவசமாக டெம்போ மீது மோதிய காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், படுகாயம் அடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், 2 பேர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மற்ற 2 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இருவரும் அடுத்தடுத்து பலியாகினர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் அகமது நகர் மாவட்டம் பர்னேர் தாலுகாவை சேர்ந்த ஆகாஷ் ரோக்டே(வயது24), சுரேஷ் கரந்திகர் (42), சித்தார்த்(23), சுனில் விலாஷ்(21) என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story